புதன், 21 ஏப்ரல், 2010

மன்னிக்க வேண்டுகிறேன் !

இது என் முதல் பதிவு இதில் நான் இடும் நிறை குறைகளை திருத்தி என்னை ஊக்கபடுத்த உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.
அன்பு என் தந்தையின் பெயர் அறன் எனது பெயர்.
இப்போது தலைப்பிற்கு வருகிறேன் கடந்த வருடம் 2009 என மனைவி கருவுற்றிருந்த
சமயத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது அது அவளுக்கு இரண்டாவது மகப்பேறு காலம்
அந்த சமயத்தில் என் தாயார் அருகில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன் ஆனால் என் தாயாரோ தன்னால் வர இயலாது என்று கூறி விட்டார்கள்.முதல் மகப்பேறு காலத்தில் என் மனைவியின் தாய் பராமரிப்பிலேயே
பெரும் பகுதி காலம் கழிந்தது.அந்த நேரத்திலும் எனது பெற்றோர் தரப்பில் எங்கள் கூட இருக்கும் வாய்ப்பு அமையவில்லை.சரி பெரும்பாலும் முதல் பிரசவம் மனைவியின் தாய் வீட்டில்தான் பார்ப்பார்கள் என்ற வழக்கம் இருந்ததால் நானும் அதனை பெரிது படுத்தாமல் இருந்தேன் .மற்றபடி என் தாய் மற்றும் தந்தை எங்கள் நலனை அடிக்கடி விசாரிக்க தவறியதில்லை.எங்கள் நலனில் என்றும் அக்கறையுடன் இருப்பார்கள் இது நடந்தது 2005- இல்.சரி என் மனைவியின் வீட்டுதரப்பில் கேட்கலாம் என்றால் எனக்கு குற்ற உணர்ச்சியே மேலிட்டது அதன் காரணமாக அவர்களையும் உதவிக்கு கூப்பிடாமல் என் மனைவியை நானே முடிந்த வரையில் கவனித்து வந்தேன் இப்படியே ஏழு மாதங்கள் கழிந்தன.இடைப்பட்ட காலத்தில் என் தாயிடம் பேசுவதையே நிறுத்தி விட்டேன் கோபத்தில்.இந்த சூழலில் ஒரு நாள் என் அண்ணன் போன் பண்ணி ஏன் அம்மாவிடம் பேசுவதில்லை என்று கேட்க எனக்கு விருப்பமில்லை என்று நான் கூற(இந்த இடத்தில ஒன்றை கூற விரும்புகிறேன் என் அக்காவின் மகப்பேறு காலங்களில் (இருமுறை) உதவியாக இருந்து என் தாய் கவனித்து கொண்டார்கள்.என் அண்ணனின் குழந்தை பிறக்கும்போதும் (ஒருமுறை)கவனித்து கொண்டார்கள்.ஆனால் என் மனைவியின் முதல் மகப்பேறு காலத்தில் அவ்வப்போது ஓரிருமுறை அதிகபட்சம் ஒரு வாரம் கவனித்திருப்பார்கள் எங்கள் வீட்டிற்கு வந்து அவ்வளவே)இப்போது அண்ணன் விஷயத்திற்கு வருகிறேன் அவன் என்னிடம் உன் முதல் குழந்தைக்கும் அம்மா பக்கத்தில் இருந்து நன்றாக கவனித்தார்களே என்று கேட்க ,நான் கோபத்தில் அப்படி உன் குழந்தைக்கோ அல்லது அக்காவின் குழந்தைக்கோ இருந்து கவனித்து போல் கவனிக்க வில்லை என்று கூற இப்படி நன்றி இல்லாமல் பேசுகிறாயே என்று அவன் பதிலுக்கு கூற ஆத்திரம் தலைக்கேற அப்படி ஏற்கனவே கவனித்ததாக சொன்னால் செருப்பால் அடிப்பேன் என்று கூற மறு முனையில் போன் துண்டிக்கப்பட்டது.அந்த நொடிப்பொழுதில் என் தவறை உணர்ந்தேன் வார்த்தையை கொட்டியதற்காக.ஆனால் இந்த நவீன யுகத்தில் உங்கள் தவறை உணர நொடிப்பொழுது என்பது மிக மிக தாமதமானதாகும் ஏனெனில் என் அண்ணன் அதை அப்படியே என் தாயிடம் கொட்டிவிட்டான் அடி பிசகாமல் அடுத்த நொடியில் ஏனெனில் அந்த சூழல் அப்படி..இன்னொன்றையும் கூறி கொள்கிறேன் என் அண்ணன் எனக்கு வாழ்வில் வரமாக கிடைத்தவன்.மிகவும் நல்லவன், இயல்பானவன்.எனக்கு கிடைத்த என் சகோதரியும் அப்படித்தான்.உண்மையில் வேறு யாருக்கும் இது போன்று கிடைத்திருக்க மாட்டார்கள் அந்த வகையிலும் நான் கொடுத்து வைத்தவன்.இந்த சூழலில் என் தாயுடன் எனக்கு முற்றிலும் உறவு முறியும் நிலை ஏற்ப்பட்டது.மாதங்கள் பத்து ஆனது.இதற்கிடையில் என் சித்தி என் தாயின் சகோதரி எங்களுக்கு துணையாக வந்தார்கள் அது எனக்கு பெரிதும் ஆறுதலாக இருந்தது.வசீகரமான அழகுடன் என் மகன் (பெயரும் வசீகரன் தான் ) பிறந்தான்.அந்த நொடியில் எல்லோருக்கும் போன் பண்ணி என் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டிருந்தேன் .இதையெல்லாம் விளையாடிக்கொண்டே கவனித்து கொண்டிருந்த என் மூத்த மகள் சுபிக்ஷா (வயது 4) எல்லோருக்கும்
போன் பண்ணி சொல்கிறாயே தாத்தாவிற்கும் சுகந்தா அப்பத்தாவிற்கும் ஏன் போன் பண்ணவில்லை? என்று என்னை கேட்க என் தாயை செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன எனக்கு என் மகள் கொடுத்த சரியான செருப்படி அது. அதிர்ந்து போனேன் அந்த நொடிபொழுதில் என் தாயிடம் போன் பண்ணி மகன் நலமாக பிறந்ததை கூற அவர்கள் என் பிரார்த்தனை வீண் போகவில்லை என்று சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனார்கள். அன்று முதல் இன்று வரை என் தாய் வருத்தப்பட்டு எதையும் கேட்கவில்லை ஆனால் நான் பேசாமல் இருந்த காலத்தில் என்னை தவிர எல்லோரிடமும் இது விஷயமாக வருத்தப்பட்டுகொண்டே இருந்தார்கள் என்பதையும் நானறிவேன்.என் மகள் அன்று ஏன் அவ்வாறு கூறினாள் என்பது எனக்கு இன்றளவும் புரியாத புதிர்தான்.ஆனால் அவள் கொடுத்த அடியை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன் இனியொரு முறை நிதானமிழந்து பேச மாட்டேன்.இன்னொரு விஷயமும் எனக்கு புரிந்தது என் சகோதரி கருவுற்றிருந்த காலம் 1995 என் அண்ணன் மனைவி கருவுற்றிருந்த காலம் 2001 என் மனைவியின் காலம் 2009 இந்த காலத்தில் என் தாய்க்கும் வயது முதுமை அடைந்திருக்கும் நிலையில் என் எதிர்பார்ப்பு முற்றிலும் தவறானதே இதில் என் சுயநலம் மட்டுமே இருந்துள்ளது என்பதையும் உணர்ந்துள்ளேன்.மற்றபடி என் மனைவியை மகப்பேறு நன்றாகவே கவனித்து கொண்டேன்.இது போன்றதொரு எதிர்பார்ப்பான சூழல் உங்களுக்கும் நேரலாம் நண்பர்களே அப்படி நேர்ந்தால் அந்த நேரத்தில் உங்கள் தாயின் உடல்நிலையையும் கவனத்தில் கொள்ளவும்,கூடுமான வரையில் நீங்களே கூட இருந்து கவனித்து கொள்ளுங்கள் இந்த காலகட்டத்தில் உங்களுக்கும் உங்கள் மனைவிக்குமான நெருக்கம் இன்னும் அதிகமாகும்.எல்லாம் நன்மைக்கே. இந்த பதிவின் மூலம் என் தாயிடம் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.